கோலாலம்பூர், ஆகஸ்ட்-20, 2024 தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆகஸ்ட் 26 முதல் 31 வரை அனுமதியில்லாத ட்ரோன் (drone) பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தேசிய தின கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களை அத்தடை உட்படுத்தியுள்ளது.
தேசிய தின கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகளும், கொண்டாட்டங்களும் எவ்வித பிரச்னையுமின்று சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதே அதன் நோக்கம் என, மலேசிய வான் போக்குவரத்து அதிகாரத் தரப்பான CAAM கூறியது.
பொது மக்களின் பாதுகாப்பும் முக்கியம்; அவர்களை உட்படுத்தி ஏதாவது அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைவரது கடமையென அறிக்கையொன்றில் அது தெரிவித்தது.
அதோடு, கொண்டாட்ட இடங்களில், drone-களால் வான் சாகசங்களில் ஈடுபடும் அரச மலேசிய ஆகாயப் படை, அரச மலேசிய போலீஸ் படை, தீயணைப்பு மீட்புத் துறைகளின் விமானங்கள் விபத்தில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கவும் அத்தடை அவசியமாகும்.
தடையை மீறி drone-களைப் பறக்க விட்டு, பொது மக்களுக்கும் பொது சொத்துளுக்கும் சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக, 1969 பொது வான் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைப் பாயுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.