ஈப்போ, ஜூலை 22 – இளம் தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்தாற்றலை மேம்படுத்தும் நோக்கில், தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுகதைப் போட்டி ஒன்று நடைபெறும் என தேசிய ஒற்றுமை துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அறிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈப்போ கிந்தா இந்தியர் அரங்கில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் தொடக்க விழாவில் துணையமைச்சரின் இந்த சிறுகதைப் போட்டியின் அறிவிப்பை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மிகவும் வரவேற்பதாக அதன் தலைவர் மோகனன் பெருமாள் தெரிவித்தார்.
துணையமைச்சர் அவர்கள் முன்மொழிந்துள்ள இந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி, இளைய தலைமுறை எழுத்தாளர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்த, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் மோகனன் பெருமாள் குறிப்பிட்டார்.
முன்னதாக, சமூக ஊடகங்களில் எழுதும் எழுத்தாளர்களையும், உயர்கல்வி பயிலும் மாணவர்களையும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் இணைக்க சங்கம் முடிவெடுத்துள்ள சட்டத் திருத்தத்திற்கு வலு சேர்க்கும் வகையில் துணை அமைச்சரின் அறிவிப்பு அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, இந்த சிறுகதைப் போட்டியில் வெற்றி பெறும் படைப்புகளை நூலாக்கி, நாடு தழுவிய நிலையில் உள்ள எல்லா நூலகங்களுக்கும் விநியோகம் செய்ய வேண்டுமென்றும், அதன் வழி இளையோர் படைப்புக்குப் புது அங்கீகாரம் கொடுப்பது மட்டுமின்று வருடாந்திர திட்டமாகவும் அதனை அறிவிக்க வேண்டும் என்று மோகனன் கேட்டுக் கொண்டார்.