
செந்தோசா, மார்ச்-22 – மஸ்ஜிட் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய இடமாற்ற விவகாரத்தை குறிப்பிட்ட சிலர் தங்களின் சுய நலன்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
நல்லிணக்கம் கெடாமால் சுமூகத் தீர்வுக்கு அனைத்துத் தரப்பும் முயன்று வரும் நிலையில், இது போன்ற சுயநலவாதிகளின் பொறுப்பற்றச் செயலால் சமூகத்தில் பதற்றம் அதிகரிப்பது கவலையளிப்பதாக, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
எனவே, இவ்விஷயத்தில் தேவையின்றி மூக்கை நுழைத்து சமூகத்தின் ‘சாம்பியனாக’ முயல வேண்டாமென்ற பிரதமரின் எச்சரிக்கையைத் தாம் பெரிதும் வரவேற்பதாக குணராஜ் சொன்னார்.
நியாயமான அதே சமயம் அனைவருக்கும் சுமூகமான முறையில் தீர்வுக் காணப்படுமென பிரதமர் உத்தரவாதமளித்துள்ளார்.
அதை அனைவரும் மதிக்க வேண்டும்; அதை விடுத்து இன மத உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு குளிர்காயக் கூடாது.
இது போன்ற புல்லுருவிகளால் காங்காலமாக நாம் கட்டிக் காத்து வரும் ஒற்றுமை சீர்குலைந்து விடக் கூடாது.
அப்படி யாராவது தீய நோக்கோடு செயல்பட்டால் அதிகாரத் தரப்பு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் குணராஜ் வலியுறுத்தினார்.
மஸ்ஜித் இந்தியா ஆலய விவகாரத்தில் மூக்கை நுழைத்துள்ள சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத், இந்துக்களை சீண்டும் விதமாக மீண்டும் சினமூட்டும் கருத்துகளைப் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.