டாக்கா, ஜூலை-24, இட ஒதுக்கீடு தொடர்பில் வெடித்த மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியதால் கலவர பூமியாகியுள்ள வங்காளதேசத்தில், நிலைமை மேம்படுவதாகத் தெரியவில்லை.
எனவே, ஊரடங்குச் சட்டத்தை வியாழக்கிழமை வரை நீட்டிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
முக்கிய நகரங்களில் இராணுவமும் தொடர்ந்துக் குவிக்கப்பட்டிருக்கும்.
துண்டிக்கப்பட்ட இணையச் சேவைகளும் தற்போதைக்கு வழக்கத்திற்குத் திரும்பாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு வார கால வன்முறைகளில் குறைந்தது 187 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை முதல் மாணவர் அமைப்பினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் காயமடைந்து, ஒரு நாளைக்கு சராசரியாக 70 முதல் 80 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இணையச் சேவைகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டால், வர்த்தக நடவடிக்கைகள் செயலிழந்து, நாடே ஸ்தம்பிதம் அடையுமென, பெருநிறுவனங்கள் பிரதமர் ஷேக் ஹசீனா வாஜிட்டிடம் (Sheikh Hasina Wajid) முறையிட்டுள்ளன.
எனினும், நிலைமை சுமூகமடையும் வரை, பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் இல்லையென ஹசீனா திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
வங்காளதேச கலவரத்தில் பாதிக்கப்படாதிருக்க ஏதுவாக, அங்குள்ள மலேசியர்கள் தாயகம் கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.
123 பேரடங்கிய முதல் குழு நேற்று பாதுகாப்பாக கோலாலம்பூர் வந்தடைந்தது.