
பினாங்கு, ஜூலை 30 – நாட்டில், குழந்தை கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அரசாங்கம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் அ. குமரேசன் கருத்துரைத்துள்ளார்.
அண்மையில், நெகிரி செம்பிலான் ரொம்பினில் காணாமல் போனதாக நம்பப்பட்ட ஆறு வயது குழந்தை திஷாந்த் முனிசாமி, சொந்த தந்தையாலேயே கொலை செய்யப்பட்டு காட்டு பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயது நிரம்பிய ஜெய்ன் ரேயான் என்ற குழந்தையின் கொலை சம்பவத்திலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது நாட்டில் மற்றமொரு குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென்று அவர் கூறியுள்ளார்.
இத்தகைய கொலை வழக்குகளில், குற்றவாளிகள் பெரும்பாலும் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாததால் தண்டனையிலிருந்து தப்பிக்கிறார்கள் என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்றும் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு முழுமையாக நீதி வழங்க இயலாது என்றும் குமரேசன் கடுமையாக சாடியுள்ளார்.
இந்தச் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் சட்ட திட்டங்களைக் கடுமையாக்க வேண்டிய முயற்சிகளில் உடனடியாக ஈடுபட வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.