
கோலாலம்பூர், செப்டம்பர் 22 – தொழில்முனைவு மற்றும் மலேசியாவின் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, Commerce.Asia குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான கணேஷ் குமார் பாங்காவிற்கு, 2026ஆம் ஆண்டிற்கான MAICCI தொழில்முனைவோர் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (MAICCI) ஏற்பாடு செய்த முதலாவது MAICCI Entrepreneur Summit 2026 நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங், கணேஷுக்கு இந்த விருதை வழங்கினார்.
தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களை உருவாக்குதல், டிஜிட்டல் தளங்கள் மூலம் வர்த்தகங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் மலேசியாவின் புத்தாக்கச் சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கணேஷ் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் MAICCI இந்த விருதை வழங்கியது.
விருதைப் பெற்றுக்கொண்ட கணேஷ், தொழில்முனைவு என்பது வெறும் லாபத்தை ஈட்டுவதோடு நின்றுவிடாமல், சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சியடைய அறிவு, வணிகத் தொடர்புகள், தொழில்நுட்பம் மற்றும் உரிய ஆதரவு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.



