கூலிம், மே 16 – கெடாவிலுள்ள, அரசாங்க மருத்துவமனை ஒன்றை சேர்ந்தவர் என நம்பப்படும் மருத்துவ அதிகாரி ஒருவரின், மனதை நெகிழ வைக்கும் வேண்டுகோளைக் கொண்ட பதிவு ஒன்று வைரலாகியுள்ளது.
மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால், மருத்துவமனை ஊழியர்கள் எதிர்கொள்ளும் அவநம்பிக்கையான சூழலையும், மனச் சோர்வையும் சுட்டிக் காட்டும் வகையில் அந்த பதிவு அமைந்துள்ளது.
அந்த செய்தியை முகநூல் பயனரான Syahid Said என்பவர் நேற்று பகிர்ந்துள்ளார். அதோடு, அந்த பதிவில், வெள்ளை பலகையில் எழுதப்பட்டிருக்கும் குறிப்பின் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் காத்திருப்பதால் ஏற்படும் சிரமத்திற்காக மன்னிப்புக் கோருவதோடு, களைப்பு மற்றும் நோய்வாய்ப்பட்ட போதிலும், பொதுமக்களுக்கு சேவை செய்ய அயராது உழைக்கும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பையும் அந்த குறிப்பு வலியுறுத்துகிறது.
அதிகப்படியான பணிச்சுமை காரணமாக சில மருத்துவர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டு தனியார் துறைக்கு மாறிச் சென்றிருப்பதையும் அந்த குறிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதனால், மருத்துவர்களின் அர்ப்பணிப்புக்கும், சேவைக்கும் அங்கீகாரம் வழங்குங்கள் எனும் வேண்டுகோளோடு அந்த குறிப்பு முடிக்கப்பட்டுள்ளது.
அந்த குறிப்பு சமூக ஊடகங்களில் வைரலாகி, இணையப் பயனர்களின் கவனத்தை ஈத்துள்ளது.
அதில் பலர் மருத்துவர்களின் தியாகத்தை பாராட்டியுள்ளதோடு, அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
அதிலும், “இன்னமும் சளைக்காமல் போராடும் அரசாங்க மருத்துவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.” என அதில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.