கோலாலம்பூர், ஜூலை 2 – சிறு வயதிலிருந்தே சீக்கிய மத நம்பிக்கையில் வளர்ந்ததாக கூறும் ஆடவர் ஒருவர், தாம் ஒருபோதும் முஸ்லீமாக இருந்ததில்லை. அதனால் தாம் ஒரு முஸ்லீம் அல்ல என அறிவிக்க கோரி, சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
28 வயதான அவ்வாடவர், கடந்தாண்டு டிசம்பர் நான்காம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கை பதிவுச் செய்துள்ளார்.
எனினும், அவ்வாடவரின் மதத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஷரியா நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. அதனால், அவ்வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, MAIWP எனும் கூட்டரசு பிரதேச இஸ்லாமிய மத கவுன்சில் மனு செய்துள்ளது.
2007-ஆம் ஆண்டு காலமான, அவ்வாடவரின் தாயார், 1993-ஆம் ஆண்டு, பாகிஸ்தான் நாட்டவரை திருமணம் செய்துக் கொண்டதால், இஸ்லாத்தை தழுவியுள்ளார்.
எனினும், 1996-ஆம் ஆண்டு பிறந்த அவ்வாடவரை, அவரது தாயார் தொடர்ந்து சீக்கிய மத நம்பிக்கையிலேயே வளர்த்துள்ளார்.
அதனால், தாம் இதுவரை பள்ளிவாசலுக்கு சென்றதில்லை, நோன்பை கடைப்பிடித்தது இல்லை, ஹலால் உணவு முறையை பின்பற்றியது இல்லை, ஜாகாட்டை செலுத்தியதும் இல்லை என அவ்வாடவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளியில், SPM தேர்வெழுதும் போது கூட, இஸ்லாமிய கல்வி தேர்வுக்கு தாம் அமரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சீக்கிய கோவிலுக்கு சென்று, சீக்கிய மத நம்பிக்கை அடிப்படையில் வாழும் தம்மை ஒரு முஸ்லீம் அல்ல என நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
தாம் விரும்பிய முஸ்லீம் அல்லாத பெண்ணை கூட தம்மால் இன்னமும் கரம்பிடிக்க முடியவில்லை என கூறியுள்ள அவர், இறந்த பிறகு தமது விருப்பத்துக்கு மாறாக சொத்துகள் பகிர்ந்தளிக்கப்படுவதையும், தமது உடலை இஸ்லாமிய துறை எடுத்துச் செல்லாமல் தடுக்கவும், தொடர்ந்து தாம் சீக்கியராக வாழவும், நீதிமன்றம் தாம் ஒரு முஸ்லீம் அல்ல என அறிவிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது வழக்கை எதிர்த்து கூட்டரசு பிரதேச இஸ்லாமிய மத கவுன்சில் செய்திருக்கும் மனு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படும்.