
பெட்டாலிங் ஜெயா, மே 18 – செத்தியவாங்சா (Setiawangsa) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நிக் நஸ்மி நிக் அஹ்மாட் (Nik Nazmi Nik Ahmad) காலி செய்திருந்தாலும், அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ (Hannah Yeoh) உறுதியளித்துள்ளார்.
மேலும், கோலாலம்பூரின் “பசுமை மையமாக” கருதப்படும் புக்கிட் டிண்டிங் (Bukit Dinding) பகுதியை தொடர்ந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதற்காக, கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL-இன் செத்தியவாங்சா கிளை அலுவலகத்தின் சேவைகளை மேலும் வலுப்படுத்துமாறு கோலாலம்பூர் மேயர் பட்லூன் மாக் உஜூட்டுக்கு (Fadlun Mak Uju) அறிவுறுத்தியுள்ளதாக ஹன்னா யோ கூறினார்.
மக்களின் புகார்கள் மற்றும் தேவைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார். நேற்று, நிக் நஸ்மி மற்றும் பண்டான் (Pandan) நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி (Rafizi Ramli) இருவரும் PKR கட்சியிலிருந்து விலகி, தங்களது நாடாளுமன்ற பதவிகளையும் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



