நியூசிலாந்து, ஜூலை 17 – நியூசிலாந்திலுள்ள, கடற்கரை ஒன்றில், இம்மாத தொடக்கத்தில், இறந்து கரை ஒதுங்கிய திமிங்கிலம், “Spade-toothed Whale” எனும் அரிய வகை திமிங்கிலம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வகை திமிங்கிலங்களை, இதுவரை யாருமே உயிருடன் பார்த்தது இல்லை என கூறப்படுகிறது.
1874-ஆம் ஆண்டு, நியூசிலாந்தின் சாதம் (Chatham) தீவிலிருந்து, கீழ் தாடை மற்றும் இரு பற்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, உலகில் அவ்வகை திமிங்கிலம் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக கண்டுபிடித்தனர்.
பெரும்பாலும் தென் பசிபிக் பெருங்கடலில் மட்டுமே அவ்வகை திமிங்கிலங்கள் வசிப்பதாக கூறப்படுகிறது.
இம்மாதம் நான்காம் தேதி, நியூசிலாந்து, ஓடாகோ மாநிலத்திலுள்ள, கடற்கரை ஒன்றில் தரைத் தட்டிக் கிடந்த ஐந்து மீட்டர் நீளமுள்ள திமிங்கிலம், வண்ணம், மண்டை ஓடு, நீண்ட அலகு மற்றும் பற்களை கொண்டு, அது காண்பதற்கு மிகவும் அரிதான “Spade-toothed Whale” வகை திமிங்கிலம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், அந்த திமிங்கிலம் குறித்த மேல் விவரங்களை வெளியிட மேலும் சில கால அவகாசம் ஆகலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், முதல் முறையாக “Spade-toothed Whale” திமிங்கிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அந்த வகை திமிங்கிலங்கள் தொடர்பான புதிய தகவல்களை திரட்ட அது உதவியாக அமையுமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.