ஈப்போ, நவ 5 – ஜாலான் சிம்பாங் பூலாய் – கேமரன் மலை (Jalan Simpang Pulai-Cameron Highlands ) சாலையின் 43.4 ஆவது கிலோமீட்டரில் ஏற்பட்ட நிலச்சரிவைச் தொடர்ந்து அங்கு முழுமையான துப்புரவு பணிகள் முழுமையடைந்த பிறகு நவம்பர் 25ஆம் தேதி அந்த சாலை போக்குவரத்திற்கு திறக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதியில் நவம்பர் 1 ஆம்தேதி முதல் குவிந்துள்ள மண்களை அகற்றும் பணியில் இதுவரை 10 விழுக்காடு மட்டுமே முடிந்துள்ளதாக பேரா பொதுப்பணித்துறையின் இயக்குனர் பொறியியலாளர் ஷம்ரி மாட் காசிம் ( Zamri Mat Kasim ) தெரிவித்திருக்கிறார்.
நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் குவிந்துள்ள மண் அகற்றும் பணி முழுமையாக முடிவடைவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அந்த பகுதியில் தற்போது மண் நகர்வு சிறிது சிறிதாக ஏற்பட்டு வருவதால் துப்புரவு பணியை கவனமாக செய்ய வேண்டியுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதி குறுகியதாக இருப்பதால் மண் மற்றும் பாறை கழிவுகளை அகற்றும் இடம் குறைவாகவே உள்ளது. மழை காரணமாக மூன்று அகழ்வாராய்ச்சிகள் மற்றும் நான்கு லாரிகள் கொண்ட JKR இயந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் பணி கடினமாக இருப்பதையும் ஷம்ரி சுட்டிக் காட்டினார்.