கோலாலம்பூர், ஆகஸ்ட்-15 – பல்வேறு வங்கிச் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டதன் காரணமாக மே பேங்க் (Maybank) மற்றும் சிஐஎம்பி (CIMB) வங்கிகளுக்கு பேங்க் நெகாரா அபராதம் விதித்துள்ளது.
Maybank-கிற்கு 43 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட்டும், CIMB-க்கு 7 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட்டும் தண்டமாக விதிக்கப்பட்டன.
அவ்விரு வங்கிகளும் முறையே ஆகஸ்ட் 8-ம் மற்றும் 12-ம் தேதிகளில் அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்தின.
நிதிச் சேவை சட்டத்தின் கீழ் அவற்றுக்கு அந்த அபராதங்கள் விதிக்கப்பட்டன.
அட்டவணையிடப்படாத வங்கிச் சேவை தடை, ஓராண்டுக்கு ஒட்டுமொத்தமாக 4 மணி நேரங்களைத் தாண்டக் கூடாது.
அதோடு, சேவைத் தடை ஏற்படும் ஒவ்வொரு சமயமும் அதிகபட்சமாக 120 நிமிடங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட வேண்டுமென நிதிச் சேவை சட்டம் வரையறுத்துள்ளதை பேங் நெகாரா சுட்டிக் காட்டியது.
இவ்வேளையில் அபராதத்தைச் செலுத்திய அவ்விரண்டு வங்கிகளும் நடந்த தவற்றை ஒப்புக் கொண்டு, சீர் செய்ய வேண்டிய அம்சங்களில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளன.
பேங் நெகாராவின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு, வாடிக்கையாளர்களுக்கான சேவைத் தரத்தை மேம்படுத்தவும் உறுதி பூண்டன.