கோலாலம்பூர், ஜூலை 17 – 25 வயது நூர் பரா கர்தினியின், மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது, நெஞ்சு மற்றும் முகம் ஆகியவை அழுகி இருந்ததால், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
அதனால், நூர் பரா கர்தினியின், மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க, சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் பிரிவைச் சேர்ந்த நோயியல் நிபுணர்களுக்கு, சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட சில உயிரியல் மாதிரிகளின், ஆய்வக பகுப்பாய்வு முடிவுகள் தேவைப்படுவதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் (Datuk Hussein Omar Khan) தெரிவித்தார்.
பகுப்பாய்வு முடிவு கிடைத்தவுடன், நூர் பரா கர்தினியின் மரணத்திற்கான காரணம் தெரிய வருமென, எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அப்பெண்ணின் கொலை தொடர்பான விசாரணைக்காக, அவரது காதலனும், சந்தேக நபருமான ஆடவனின் தோயோத்தா கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையும், ஒமார் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.
இம்மாதம் பத்தாம் தேதி காணாமல் போன 25 வயது நூர் பரா கர்தினியின் உடல், கடந்த திங்கட்கிழமை, உலு சிலாங்கூர், கம்போங் ஸ்ரீ கெளேடாங் செம்பனை தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, 26 வயது போலீஸ் அதிகாரி ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.