நெகிர் செம்பிலான், மே 17 – ‘திறன்மிகு இலக்கவியல் ஆசிரியரே, மேன்மைமிகு நாட்டின் எதிர்பார்ப்பு’ எனும் கருப்பொருளுடன் நேற்று நெகிரி செம்பிலானில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அர்ப்பணிப்பு உணர்வும், மிகுந்த சமூக உணர்வும் கலந்த ஆசிரியர்களின் நற்பணிகள் நல்லாசிகளுடன் தொடர வேண்டும் என நோக்கில் இவ்வழிபாடு ஏற்பாடுச் செய்யப்பட்டதாக, முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி. கமலநாதன் தெரிவித்தார்.
மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுப்பது என்பது சுலபமான பணி அல்ல. இன்றைய காலத்தில், புத்தாக்கப் படைப்புடன் விவேக மிக்க சிந்தனையுடன் மாணவர்களை கவரக்கூடிய அணுகுமுறையுடன் பாடங்களை போதிக்க வேண்டும்.
இந்நிலையில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சாவல்களையும், அதனையும் கடந்து செயல்படும் ஆசிரியர்களையும் குறித்து வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார், மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் முதன்மை அமைப்பாளர் பாஸ்கரன் சுப்பிரமணியம்.
சிரம்பான், லோபாக், ஸ்ரீ சுப்பிரமணியர் பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற இச்சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட ஆசிரியர்களும், ஆலயத் தலைவரும் தங்களது மகிழ்வான தருணங்களை பகிர்ந்து கொண்டனர்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஆசிரியப் பெருமக்களின் பங்கு அளப்பரியது. அவர்களின் உழைப்புக்காகவும் நல் ஆரோக்கியத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த வழிபாடு, இனியும் தொடர்ந்து நடைபெறும் என பாஸ்கரன் தெரிவித்தார்.