
சிரம்பான், ஆகஸ்ட் 10 — நெகிரி செம்பிலான் மாநில இந்திய சமூகத்தின் நலன், தேவைகள் மற்றும் மேம்பாடு தொடர்பான விவகாரங்கள் குறித்து ம.இ.கா தலைவர்களுடன் மாநில மந்திரி பெசார் கலந்துரையாடியுள்ளார்.
ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் ஆகியோரின் மரியாதை நிமித்தமான சந்திப்பை வரவேற்ற நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், இச்சந்திப்பு இந்திய சமூகத்தின் நலன் மற்றும் மேம்பாடு தொடர்பான கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கான நல்ல வாய்ப்பாக அமைந்ததாகக் கூறினார்.
இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளுக்கு மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சியை அனைத்து மக்களும் ஒன்றிணைந்து அனுபவிப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நெகிரி செம்பிலான் சட்டமன்ற சபாநாயகர் பதவியை ம.இ.கா கோருவதாக தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியுற்ற நிலையில் ஆட்சிக்குழு உறுப்பினர் அந்தஸ்து கொண்ட சபாநாயகர் பதவியைத் தர பரிசீலிப்பதாக மந்திரி பெசார் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விக்னேஸ்வரன் மாநில மந்திரி பெசாரைச் சந்தித்து இந்திய சமூகத்தின் நலன் மற்றும் மேம்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.



