Latestமலேசியா

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையம் ஏற்பாட்டில் 12வது அனைத்துலக யோகா தினக் கொண்டாட்டம்

கோலாலம்பூர், ஜூன் 21 – மலேசியாவிற்கான இந்திய உயர் ஆணையம் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 12வது அனைத்துலக யோகா தினக் கொண்டாட்டம் இன்று கோலாலம்பூரிலுள்ள கிளப் அமானில் சிறப்பாக நடைபெற்றது.

“ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” (Yoga for Healthy Ageing) என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் பங்கேற்றனர். இந்தியர், சீனர், மலாய் உள்ளிட்ட பல்வேறு இன மக்களின் பங்கேற்பு நிகழ்விற்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையில், யோகா என்பது இந்தியா உலகிற்கு வழங்கியுள்ள அரிய பரிசு எனக் குறிப்பிட்ட அவர், 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 21 அனைத்துலக யோகா தினமாக அங்கீகரிக்கப்பட்டதையும், இதற்கு சுமார் 175 நாடுகள் ஆதரவு வழங்கியதையும் நினைவுகூர்ந்தார்.

மேலும், யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல; உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைத்து பிரபஞ்சத்துடன் இணைக்கும் ஒரு முழுமையான தத்துவம் என்றும் அவர் விளக்கினார். சூரிய நமஸ்காரம், பிராணாயாமம் போன்ற பயிற்சிகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நல்ல சிந்தனைகளையும் உருவாக்க உதவுகின்றன என்றார்.

இதனிடையே, நிகழ்வை முன்னின்று ஒருங்கிணைத்த இந்திய உயர் ஆணையத்தின் பிரதிநிதி, இந்த ஆண்டு நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்தார். இளைஞர்கள், மூத்த குடிமக்கள், குடும்பத்தினர் என அனைத்து வயதினரும் இதில் பங்கேற்றதுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), பல்வேறு நாடுகளின் தூதர்கள், இந்திய உயர் ஆணையம் மற்றும் இராஜதந்திர அதிகாரிகளும் கலந்துகொண்டதாக அவர் கூறினார்.

2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் அனைத்துலக யோகா தினம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு முதல் மலேசியாவிலும் இந்த தினம் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்வின் போது பங்கேற்பாளர்கள் பொதுவான யோகா நடைமுறை (Common Yoga Protocol) அடிப்படையில் பல்வேறு யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

யோகாவை ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே கொண்டாடாமல், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய இரு பேச்சாளர்களும், யோகா உடல் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் உடல் வலிமையை மேம்படுத்தும் சிறந்த வழிமுறையாகும் என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் தங்களின் அனுபவத்தை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு, இந்தியா மற்றும் மலேசியாவுக்கு இடையிலான விரிவான மூலோபாய கூட்டாண்மையின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், பல இன மக்களை ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமை என்ற பொதுவான நோக்கில் ஒன்றிணைக்கும் ஒரு மேடையாகவும் அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!