காட்மண்டு, அக்டோபர்-1, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள
நேப்பாளத்திற்கு பயணம் மேற்கொள்வதை ஒத்தி வைக்குமாறு, மலேசியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
செப்டம்பர் 26 முதல் அந்த தெற்காசிய நாட்டில் இடைவிடாமல் பெய்யும் மழையால், முக்கிய நெடுஞ்சாலைகளும் சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்துத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தலைநகர் காட்மண்டுவில் வெள்ள நீர் மட்டம் இன்னமும் ஆபத்தான அளவிலேயே உள்ளது.
காட்மண்டுவை இணைக்கும் பாலங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.
இப்படியொரு நிலையில் மலேசியர்கள் நேப்பாளத்துக்கு பயணம் மேற்கொள்வது பாதுகாப்பாக இருக்காது என, காட்மண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்தது.
அக்டோபர் 5 வரை கனமழை நீடிக்கும் என நேப்பாள வானிலை ஆராய்ச்சித் துறை அறிவித்துள்ளதால் நிலைமை தற்போதைக்கு சீரடையாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வேளையில் நேப்பாளத்திலிருக்கும் மலேசியர்களும் இந்த மழை-வெள்ள காலத்தில் முழு விழிப்பு நிலையிலிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
முன்னதாக வெள்ளத்தில் பாதிப்பட்ட 25 மலேசியர்கள், உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் பாதுகாப்பாக காட்மண்டு சென்றடைந்தனர்.
இந்த பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி நேப்பாளத்தில் இதுவரை 192 பேர் பலியாகியுள்ளனர்.
194 பேர் காயமடைந்த வேளை 30 பேரை இன்னமும் காணவில்லை.