Latestமலேசியா

நேப்பாள ஆடவருடன் சென்று கொடுமைகளை அனுபவித்த மலேசிய மாது தாயகம் திரும்ப ஏங்குகிறார்

கோலாலம்பூர், மே 20 – நேப்பாள ஆடவரை நம்பி அவருடன் சென்று, பத்தாண்டுகளாக நரக வேதனை அனுபவித்து தற்போது சிறையில் இருக்கும் மலேசிய மாது தற்போது தாயகம் திரும்ப ஏங்குகிறார்.

நெகிரி செம்பிலான், போர்டிக்சனைச் சேர்ந்த மாலா வேலு என்பவர் 2012-ஆம் ஆண்டு ஹோட்டல் ஒன்றில் ஒன்றாக பணிபுரியும் போது நேப்பாள ஆடவருடன் காதல் கொண்டு, அவருடனேயே நேப்பாளம் சென்றுள்ளார்.

முதலில், 30 நாள் சுற்றுலா விசாவில் சென்ற மாலா அந்த நேப்பாள ஆடவரை பாரம்பரிய முறையில் திருமணம் செய்துக் கொண்டு மாமனாருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

ஆரம்பத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாக போயுள்ளது. ஆனால் தனது கடப்பிதழ் குறித்து கணவரிடம் மாலா கேட்டதில் இருந்து பிரச்னை வெடித்திருக்கிறது.

கடப்பிதழை பிடித்து வைத்துக் கொண்ட அந்த நேப்பாள கணவன், மாலாவை அடித்து உதைத்து துன்புறுத்தியதோடு, அங்குள்ள தொழிற்சாலைகளிலும் பண்ணைகளிலும் சட்டவிரோதமாக மாலாவை பணியில் சேர்த்துள்ளான்; வேலையில்லாத நாட்களில் யாருடனும் பேச முடியாதவறு வீட்டிலேயே அடைத்தும் வைத்துள்ளான்.

மாலாவிடம் இருந்த பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவரைப் பல சமயம் பட்டினியும் போட்டுள்ளான் அந்த ஆடவன்.

தன் பேச்சைக் கேட்காவிட்டால் கும்பலாகக் கற்பழித்து விடப் போவதாக மிரட்டியும் வந்துள்ளான்.

இப்படியே பத்தாண்டுகளாக அவனிடம் கொடுமைகளை அனுபவித்த மாலா, ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பக்கத்து வீட்டாரின் உதவியுடன் அதிகாரத் தரப்பை நாடினார்.

அவரின் துரதிஷ்டம், விசா அனுமதி காலத்தை மீறி அதிக காலம் தங்கியிருந்தக் குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

தற்போது 57 வயதாகும் மாலா மலேசியாவில் உள்ள தனது 7 பிள்ளைகளையும் பார்க்க ஏங்குவதாக உள்ளூர் செய்தி தளம் அவரை தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டபோது அவர் இத்தகவல்களை வெளியிட்ட போது கூறியிருக்கிறார்.

ஈராண்டுகளாக சிறையில் இருந்தாலும் கொடுங்கோல் கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பித்து நிம்மதியாக இருப்பதாகக் கூறும் மாலா, தாயகம் திரும்ப தனக்கு விடிவுகாலம் பிறக்காதா என காத்திருக்கிறார்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து மலேசிய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஹஜி ஹசானிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார் மக்களவை உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன்.

மனித ஆள் கடத்தல் சம்பவம், குறிப்பாக நேப்பாள் நாட்டிற்கு மலேசியர்கள் கடத்தப்படும் சம்பவம் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக சிவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மாலா மனித ஆட்கடத்தளுக்கு உள்ளாகி இருப்பதோடு, அவரின் கடப்பிதழ் பறிக்கப்பட்டு, பல கொடுமைகளுக்கு அவர் உள்ளாகியுள்ளார். ஆனால், நேப்பாள அரசாங்கம் அவரின் பிரச்சனைக்கு முறையாக தீர்வு காணாமல், அவர் மீதே குற்றம் சுமத்தி, 7 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பட்டுள்ளார். இது வேதனைக்குறைய விஷயமாகும் என சிவரஜ் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை, அரசாங்க சார்பற்ற நிறுவனமான Project Liber8-டுடன் இணைந்து கையாண்டு வரும் சிவராஜ், மாலாவை தீபாவளிக்குள் மலேசியாவுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அதே சமயத்தில், மாலாவுக்கு நியாயம் கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!