
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-14,
பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா டாமான்சாரா இடைநிலைப்பள்ளியில் இன்று காலை நான்காம் படிவ மாணவி கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க, கல்வி அமைச்சு சிறப்பு செயற்குழுவை அமைத்துள்ளது.
சந்தேக நபரான இரண்டாம் படிவ மாணவன் கைதாகியுள்ள நிலையில், போலீஸ் விசாரணைக்கும் தமது தரப்பு முழு ஒத்துழைப்பு வழங்குமென, அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் தெரிவித்தார்.
பிள்ளையை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட அவர், அச்சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆலோசகச் சேவையை வழங்க குழு அனுப்பப்பட்டிருப்பதாக சொன்னார்.
காலை 9.30 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் அந்த நான்காம் படிவ மாணவியை, 14 வயது மாணவன் சரமாரியாகக் கத்தியால் குத்தியதாக, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் Shamsudin Mamat முன்னதாகக் கூறியிருந்தார்.
கொலையாளி பயன்படுத்தியதாக நம்பப்படும் 2 கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; அச்சம்பவத்தில் வேறு யாரும் காயமடையவில்லை.
கொலைக்கான உண்மைக் காரணம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை; என்றாலும், பகடிவதை அம்சங்கள் இருந்ததாக தொடக்கக் கட்ட விசாரணையில் எதுவும் கண்டறியப்படவில்லை என Shamsudin தெரிவித்தார்