ஷா ஆலாம், டிசம்பர்-22, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்திற்கான பண்டார் தாசேக் செலாத்தான் LRT நிலையத்தில், 2 கால்பந்து ஆதரவாளர் கும்பல்கள் இடையே மூண்ட சண்டை குறித்து Prasarana நிறுவனம் போலீசில் புகார் செய்துள்ளது.
அம்மோதலில், இரயிலின் கதவு மற்றும் கண்ணாடி உட்பட LRT நிலையத்தின் வசதிக் கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
எனினும் நல்ல வேளையாக எவரும் அதில் காயமடையவில்லை.
நிலைமைக் கைமீறிப் போவதற்குள், பணியில் ஈடுபட்டிருந்த உதவிப் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அச்சம்பவம் உண்மையிலேயே வருத்தமளிப்பதாகக் கூறிய Prasarana, இரயில் நிலையங்களிலும் இரயில் பெட்டிகளிலும் எந்தவொரு வன்முறையாட்டத்திற்கும் இடமில்லை என எச்சரித்தது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் RapidKL இரயில் மற்றும் பேருந்து சேவை நடத்துநர் என்ற முறையில், பொது போக்குவரத்துகள் பயணிகளுக்குப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டியது தங்களின் கடமையாகும்.
அதே சமயம் பயணிகளும் பொறுப்பாகவும் நாகரீகமாகவும் நடந்துகொள்ள வேண்டியது அவசியமென Prasarana சுட்டிக் காட்டியது.
இந்நிலையில், ஏற்பட்ட சேதாரங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து Prasarana இழப்பீடும் கோரியுள்ளது.
சுமார் 20 முதல் 30 பேருக்கு இடையில் மூண்ட அச்சண்டையில், ஒருவரையொருவர் குத்திக் கொண்டும், LRT இரயில் கதவுகளை எட்டி உதைத்தும், குப்பைத் தொட்டிகளை வீசியும் அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட வீடியோக்கள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.