
கிள்ளான், ஏப் 14 – பதின்ம வயது பெண் ஒருவர் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் ஆடவன் ஒருவன் போலீஸ் நடவடிக்கையின்போது சுடப்பட்டதால் மரணம் அடைந்தான் . சிரம்பானில் கடத்தப்பட்ட 16 வயதுடைய அந்தப் பெண் பிணைப்பணம் செலுத்தப்பட்ட பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அப்பெண் ஏப்ரல் 10ஆம் தேதி மாலை மணி 5.45 அளவில் கடத்தப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறையின் நடவடிக்கை மற்றும் வேவுத்துறையின் துணை இயக்குநர் டத்தோ பாடில் மார்சுஸ் ( Fadil Marsus ) தெரிவித்தார்.
கடத்தல் கும்பல் அப்பெண்ணை விடுவிப்பதற்கு 2மில்லியன் ரிங்கிட் பிணைப்பணம் கேட்டதாகவும் அப்பெண்ணின் குடும்பத்தினர் 280,000 ரிங்கிட் ரொக்கம் மற்றும் நகைகளையும் கொடுத்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
பிணைப்பணம் கொடுக்கப்பட்ட மறுநாள் இரவு மணி 8.30 அளவில் அந்த பெண் சென்டாயானில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டதோடு கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இன்று காலை மணி 5 அளவில் கிள்ளான் வட்டாரத்தில் 21 வயதுடைய சந்தேகப் பேர்வழி அடையாளம் காணப்பட்டதோடு அவன் ஓட்டிச் சென்ற காரை போலீஸ் குழுவினர் புக்கிட் திங்கி, Jalan Bayu Tinggiவரை துரத்திச் சென்றனர்.
போலீசார் எச்சரிக்கை விடுத்தும் அந்த ஆடவன் காரை நிறுத்தத் தவறியதோடு போலீஸ் காரை மோதியபின் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினான்.
அதனை தொடர்ந்து போலீசார் திரும்ப சுட்டதில் அவன் மரணம் அடைந்தான் என Fadil Marsus கூறினார். சந்தேகப் பேர்வழி பயன்படுத்திய கார் , இதற்கு முன் பிணையாளியை சென்டாயானில் இறக்கிவிடுவதற்கு பயன்படுத்தியுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த காரில் மேற்கொண்ட சோதனையில் ஒரு துப்பாக்கி மற்றும் பாராங் கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.