கோலாலம்பூர், மே 9 – கடத்தப்பட்ட யானை தந்தங்களை, தலா பத்தாயிரம் ரிங்கிட் விலை கொடுத்து “ஆன்லைனில்” வாங்கிய உள்நாட்டு ஆடவர் ஒருவரின் செயல் அம்பலமாகியுள்ளது.
நேற்று முன்தினம், பிற்பகல் மணி 1.40 வாக்கில், புத்ராஜெயாவிலுள்ள, அவ்வாடவரின் வீட்டில், PERHILITAN – தேசிய பூங்கா, வனவிலங்கு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், அவ்விஷயம் அம்பலமானது.
அவ்வீட்டில் இருந்த அறை ஒன்றில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த, சுமார் 50 ஆயிரம் ரிங்கிட் பெருமானமுள்ள இரு யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை, PERHILITAN தலைமை இயக்குனர் டத்தோ அப்துல் கடிர் அபு ஹசிம் உறுதிப்படுத்தினார்.
அந்த பறிமுதல் தொடர்பில், 2010-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரான 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரும் கைதுச் செய்யப்பட்டதாக ஆப்துல் கடிர் சொன்னார்.
எனினும், பின்னர் பத்தாயிரம் ரிங்க்கிட் போலீஸ் உத்தரவாததிலும், தனிநபர் உத்தரவாததின் பேரில் அந்நபர் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, கடந்த வாரம், சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவிலுள்ள, வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பத்து லட்சம் ரிங்கிட் பெருமானமுள்ள, 12 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
அவ்வீட்டின் உரிமையாளரான 60 வயது மதிக்கத்தக்க தொழிலதிபரின் செல்வ செழிப்பின் அடையாளமாக, அந்த யானை தந்தங்கள் அங்க்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.