பத்து பஹாட், மே 2 – ஜோகூர், பத்து பஹாட், பாரிட் சூலுங்கிற்கு அருகில், மாற்றுத் திறனாளி ஒருவரை மோதி மரணம் விளைவித்ததாக, ஆடவன் ஒருவனுக்கு எதிராக இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 24 வயது லிம் குவான் யான் எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினான்.
வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 58 வயது மாற்றுத் திறனாளியான முஹமட் ரிட்சுவான் அப்துல்லாவை அவன் தனது காரால் மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
அதனால், ஐந்து மீட்டர் தூரம் வரை தூக்கியெறியப்பட்ட முஹமட் ரிட்சுவான், அருகிலுள்ள கால்வாயில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, காலை மணி ஏழு வாக்கில், ஜாலான் மூவார் – பாரிட் சூளுங் சாலையில் அவ்விபத்து நிகழ்ந்தது.
மூவாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் லிம் குவான் யானை விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இவ்வழக்கு முடியும் வரை அவர் மாதம்தோறூம் மூவார் போலீஸ் தலைமையகத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் எனும் கூடுதல் நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
முன்னதாக, மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், காரால் மோதப்பட்டு தூக்கியெறியப்படும், டாஷ்கேம் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.