பந்திங்கில் துப்பாக்கி சூட்டு சம்பவம்; பீதியில் ஆழ்ந்திருக்கும் மக்கள்

ஷா ஆலம், ஜனவரி 5 – குவாலா லங்காட் பந்திங் பகுதியிலிருக்கும் ஒரு விரைவு உணவகத்திற்கருகே, நேற்றிரவு ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
அந்த உணவகத்திற்கும் அருகிலுள்ள மற்ற கடைகளுக்கும் வந்திருந்த வாடிக்கையாளர்கள், திடீரென நடந்த இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், விரைவு உணவகத்தின் வெளிப்புறச் சுவரருகே காயங்களுடன் உணர்விழந்த நிலையில் ஆடவர் ஒருவர் இருப்பதைத் தெளிவாகக் காண முடிகின்றது. அவருக்கருகே உணவகச் சுவரில் இரத்தக் கறைகளும் காணப்பட்டன.
மேலும், வைரலான காணொளிகளில், சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் குறைந்தது இரண்டு துப்பாக்கி குண்டுகளின் உறைகள் தரையில் கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, குவாலா லங்காட் மாவட்ட காவல் துறை தலைவர், Superintendan Mohd Akmalrizal Radzi-ஐ தொடர்பு கொண்டபோது, இந்த சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை காவல்துறை விரைவில் வெளியிடும் என்று தெரிவித்துள்ளார்.



