
கோலாலம்பூர், பிப்ரவரி-19 – போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக நாளை தூக்கிலிடப்படவிருக்கும் மலேசியர் பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கான தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைக்குமாறு, CLA எனப்படும் காமன்வெல்த் வழக்கறிஞர் சங்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
பன்னீரின் வழக்கு மிகவும் கவலைக்குரியதாகும்; எனவே அவரின் மரண தண்டனையை குறைக்க, சிங்கப்பூர் அரசியலமைப்பின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள கருணை அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு, அந்நாட்டு அதிபரை CLA கேட்டுக் கொண்டது.
போதைப் பொருள் குற்றங்களுக்கான கட்டாய மரண தண்டனை, அனைத்துலக மனித உரிமைகள் தரநிலைகளின் கீழ் தேவைப்படும் ‘மிகக் கடுமையான குற்றங்களின்’ வரம்பை பூர்த்திச் செய்யத் தவறிவிட்டது.
சுருக்கமாகச் சொன்னால், போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடாது; இதுபோன்ற வழக்குகள் நியாயம் மற்றும் நீதி குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புமென CLA சுட்டிக் காட்டியது.
குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு கட்டாயமாக இருக்கும் மரண தண்டனையை, சிங்கப்பூர், அனைத்துலக மனித உரிமைகள் நடைமுறைகளுக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் CLA மீண்டும் வலியுறுத்தியது.
போதைப் பொருள் அனுப்புநராக இருந்த வழக்கில் குற்றவாளி என 2017-ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்ட 36 வயது பன்னீருக்கு, சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
உண்மையான கடத்தல்காரர் பற்றிய தகவல்களை வழங்கி அந்நாட்டு அதிகாரிகளுடன் பன்னீர் ஒத்துழைத்ததாகக் கூறப்படுகிறது; என்றாலும் மரண தண்டனையிலிருந்து அவரைத் தடுத்திருக்கக்கூடிய மூல உதவிச் சான்றிதழ் அவருக்கு மறுக்கப்பட்டது.
அவரது கருணை மனுவை அப்போதைய சிங்கப்பூர் அதிபரும் நிராகரித்து விட்டார்; இதனால் பன்னீருக்கு வேறு எந்த சட்டப்பூர்வ வாய்ப்பும் இல்லாமல் போயிருக்கிறது.