Latestமலேசியா

பழிபோட வேண்டாம்; கூட்டு தீர்வுக்கு வட்டமேசைக்கு கொண்டு வாருங்கள்; நூருல் இசா – சரவணன் விஷயத்தில் பிரபாகரன் கருத்து

கோலாலம்பூர், ஜூன்-6,

இந்தியர்களுக்கு உதவும் விவகாரத்தில் நூருல் இசா அன்வார் – டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சம்பந்தப்பட்ட சர்ச்சை பொதுப்படையாக பழிபோடும் களமாக மாறிவிடக் கூடாது.

மித்ரா தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பிரபாகரன் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுவொரு முக்கியமான விஷயமென்பதால், முதிர்ச்சியான மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையே சிறந்தது என்றார் அவர்.

அனைத்துக் கருத்து வேறுபாடுகளும், விவேகமாகவும் நிதர்சன உண்மைகள் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குழப்பத்தை உண்டாக்கும் சர்சைகளில் தலைவர்கள் ஈடுபடுவதை விட, உறுதியான முடிவுகளை அடைவதைக் காணவே மக்கள் விரும்புகின்றனர்.

எனவே, இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு வட்டமேசைக் கூட்டத்துக்கு பிரபாகரன் பரிந்துரைத்தார்.

அரசாங்க மற்றும் எதிர்கட்சி பிரதிநிதிகள், அரசு சாரா அமைப்பினர், பொது மக்கள், பொதுக் கொள்கை நிபுணர்கள், கல்வியாளர்கள், இந்தியச் சமூகத் தலைவர்கள் உள்ளிட்டோரை இந்த வட்டமேசை கூட்டம் உட்படுத்தியிருக்கும்.

இந்த அமர்வானது இந்தியச் சமுதாயத்தை நோக்கமாகக் கொண்ட தற்போதைய முயற்சிகள் மற்றும் கொள்கைகளை புறநிலையாக மதிப்பீடு செய்வது, கூறப்படும் எந்தவொரு வாதத்தையும் ஆதரிக்கக்கூடிய ஆதாரங்கள் அல்லது தரவுகளை முன்வைப்பது, பலனளிக்கும் மற்றும் உள்ளடக்கிய சமுகத் தீர்வுகளை ஒருங்கிணைத்து வடிவமைப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும்.

திறந்த மனப்பாங்கு, நேர்மை மற்றும் துறைகள் கடந்த ஒத்துழைப்பின் மூலமே நாம் ஒரு பொது சமரசத்தை அடைந்து, இந்தியச் சமுதாயத்திற்கு அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டுவர முடியும் என தான் நம்பவதாக பிரபாகரன் அறிக்கையொன்றில் கூறினார்.

திரை மறைவில் அமைதியாக மக்கள் பணி குறிப்பாக இந்தியச் சமூகத்திற்கு பங்காற்றி வருவதாக பி.கே.ஆர் துணைத் தலைவருமான நூருல் இசா முன்னதாகக் கூறியிருந்தார்.

அதையேன் திரைக்குப் பின்னால் செய்ய வேண்டும், தைரியமாக வெளிப்டையாகவே செய்யலாம் என்றும், இதுநாள் வரை திரைக்குப் பின்னால் ஆற்றிய மக்கள் பணியை ஆதாரங்களுடன் நூருல் இசா பட்டியலிடத் தயாரா என சரவணன் சவால் விட்டதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!