
கோலாலம்பூர், பிப் 27 – பெட்டாலிங் ஜெயா மாநகரத்தில் உட்பட்ட பகுதிகளில் வேப் அல்லது மின் சிகரெட்டுகளை விற்பதற்கு வியாபாரிகளுக்கு எந்த உரிமமும் வழங்கவில்லை என்று சிலாங்கூர் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிக் குழு உறுப்பினரான ஜமாலியா ஜமாலுடின் ( Jamaliah Jamaluddin ) தெரிவித்திருக்கிறார்.
மின் சிகரெட்டை விற்கும் கடைகளுக்கு குற்றப்பதிவு (Compound ) வழங்கப்படும் என அவர் கூறினார். இன்று ஷா அலாமில் சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத்தில் பெரிக்காத்தான் நேசனல் தாமான் மேடான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் Afif Bahardin எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது ஜமாலியா இத்தகவலை வெளியிட்டார்.
சில வேப் விற்பனையாளர்கள் மிகவும் தைரியமாக தனது தொகுதியில் கடைகளுக்கு வெளியே மின் சிகரெட் விற்பனை குறித்து பெரிய விளம்பரப் பலகைகளையும் வைத்திருப்பதாக Afif Bahardin சுட்டிக்காட்டினார்.
தாமான் மேடானில் பள்ளிகளுக்கு முன்புறமும் , கிளினிக்குகளுக்கு அருகிலுள்ள கடைகளிலும் மின் சிகரெட்டுகள் விற்கும் கடைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே மின் சிகரெட்டுகளின் பயன்பாட்டை சுகாதாரக் கண்ணோட்டத்தில் கண்காணிக்க சுகாதார அமைச்சு மற்றும் சிலாங்கூர் சுகாதாரத் துறையுடன் மாநிலம் ஒத்துழைப்பதாக ஜமாலியா விவரித்தார்.
பொது சுகாதாரச் சட்டம் 2024 (சட்டம் 852) க்கான புகைபிடித்தல் தயாரிப்புக் கட்டுப்பாட்டின் அமலாக்கத்துடன் இந்த முயற்சி இருப்பதாக அவர் கூறினார்.