பாங்கியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு; கொள்ளையர்கள் இருவர் சுட்டுக் கொலை

பாங்கி, மே-26,பாங்கி, பண்டார் ஸ்ரீ புத்ரா, ஜாலான் பெர்சியாரான் ஸ்ரீ புத்ரா டுவாவில் நேற்றிரவு போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இரவு 8.10 மணியளவில் புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகளுடன் இந்த துப்பாக்கிச் சண்டை நடந்ததாக புக்கிட் அமான் CID இயக்குனர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்த சந்தேக நபர்கள், போலீஸாரை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலிருந்து ஒரு ரிவால்வர் இரக துப்பாக்கி, தோட்டாக்கள், 4 பாராங் கத்திகள், வீடு உடைக்கும் கருவிகள், முகமூடிகள் மற்றும் கையுறைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த கூடுதல் விவரங்கள் இன்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என குமார் சொன்னார்.



