
ஃபுளோரிடா – ஜூலை-25 – WWE மல்யுத்த அரங்கின் முடிசூடா மன்னனாக கொடி கட்டி பறந்த ஹல்க் ஹோகன் (Hulk Hogan), மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
அவருக்கு வயது 71. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் வசித்து வந்தவர், வீட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நீண்ட காலமாகவே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த ஹல்க் ஹோகன், இதயம் பலவீனமாகி, கோமா நிலைக்குச் சென்று விட்டதாகக் ஏற்கனவே தகவல்கள் பரவியிருந்தன.
எனினும் அதனை அவரின் மனைவி மறுத்திருந்த நிலையில், ஹல்க் ஹோகன் மறைந்துள்ளார்.
இரு பக்கமும் தாடை வரை தொங்கும் மீசைதான் இவரின் அடையாளமே; தலையில் scarf துணிக் கட்டுடன் பெரும்பாலும் சிவப்பு மஞ்சள் உடையுடன் கோதாவில் குதிக்கும் ஹல்க் ஹோகன், மல்யுத்தம் பிடிக்காதவர்களையும் வசீகரித்து விடுவார்.
குறிப்பாக 80-ஆம் 90-ஆம் ஆண்டுகளில், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இரசிகர்கள் இவருக்காகவே மல்யுத்தம் பார்த்தனர் என்றால் அது மிகையாகாது.
6 முறை WWE பட்டத்தை வென்றுள்ள ஹல்க் ஹோகன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் மறைவுக்கு இரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.