Latestமலேசியா

பாடப்புத்தகப் பாடங்கள் இனி காமிக்ஸிலும்; தமிழ் கற்றலை சுவாரஸ்யமாக்கும் UPSI மாணவர்கள்!

தெலுக் இந்தான், செப். 24 – பாடப்புத்தகத்தில் படித்த தமிழ் பாடங்களை, கதாபாத்திரங்கள், வண்ணப் படங்கள், உரையாடல்கள் நிறைந்த காமிக்ஸாகப் படித்தால் எப்படி இருக்கும்?

பள்ளி மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த, சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் (UPSI) ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் தமிழ் பாடப்புத்தகப் பகுதிகளை காமிக்ஸ் புத்தகங்களாக உருவாக்கியுள்ளனர்.

Service Learning Malaysia University for Society (SULAM) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியில், UPSI மொழி மற்றும் தொடர்பியல் துறையைச் சேர்ந்த தமிழ் மொழி ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

படிவம் ஒன்று மற்றும் இரண்டுக்கான தமிழ் பாடப்புத்தகப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த காமிக்ஸ்களில், கதைகள், கதாபாத்திரங்கள், தமிழ் உரையாடல்கள், படங்கள் உள்ளிட்ட காட்சி அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து, தமிழ் வாசிப்பை மேலும் சுவாரஸ்யமாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் வாசிப்புத் திறன் பாட விரிவுரையாளர் டாக்டர் காமினி கணபதி கூறுகையில், பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் கற்ற அறிவையும் திறன்களையும் பள்ளி மாணவர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் கற்றல் சாதனங்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார்.

காமிக்ஸ் புத்தகங்களை உருவாக்கியதுடன் நிற்காமல், அவை மாணவர்களிடம் எவ்வாறு வரவேற்பைப் பெறுகின்றன என்பதையும் நேரடியாக அறிந்துகொள்ளப்பட்டது.

இதற்காக தெலுக் இந்தானிலுள்ள செயிண்ட் அந்தோணி தேசிய இடைநிலைப் பள்ளி மற்றும் செரி கண்டி தேசிய இடைநிலைப் பள்ளியில் மாணவர்களுடன் 30 நிமிட கற்றல் அமர்வுகள் நடத்தப்பட்டன.

காமிக்ஸ் வழியான கற்றல் நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் நேர்மறையான வரவேற்பை வழங்கியதாக டாக்டர் காமினி தெரிவித்தார். அதேநேரம், மாணவர்களின் உண்மையான கற்றல் தேவைகளையும் அவர்களின் புரிதல் நிலையையும் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நேரடியாக அறிந்துகொள்ள இந்த முயற்சி வாய்ப்பளித்தது.

கதை அமைப்பது, தமிழ் உரையாடல்களை எழுதுவது, பாட உள்ளடக்கத்தைத் திட்டமிடுவது முதல் மாணவர்களுக்கு ஏற்ற காட்சி அம்சங்களைத் தேர்ந்தெடுப்பது வரை ஆசிரியர் பயிற்சி மாணவர்களே இந்த காமிக்ஸ் உருவாக்கத்தில் ஈடுபட்டனர்.

“காமிக்ஸ் பாடப்புத்தகத்திற்கு மாற்றல்ல” என்றும் டாக்டர் காமினி தெளிவுபடுத்தினார். மாறாக, ஏற்கனவே உள்ள பாடப்புத்தகம் மற்றும் கற்பித்தல் சாதனங்களுடன் இணைந்து, தமிழ் கற்றலை மேலும் ஈர்க்கக்கூடியதாக மாற்றும் துணைக் கற்றல் சாதனமாகவே இது பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!