
கோலாலம்பூர், செப்-24-செராஸில் உள்ள Damai Perdana அடுக்குமாடி குடியிருப்பின் Block Dயில் வசிக்கும் குடியிருப்பாளர்களர இன்னும் வீடு திரும்ப அனுமதிக்கப்படவில்லை. அக்குடியிருப்பின் அருகே சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து கட்டடத்தின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கை கிடைக்கும் வரை அவர்கள் அங்கு திரும்ப அனுமதிக்கப்படாது என காஜாங் நகராண்மைக் கழகத்தின் 6 ஆவது மண்டல உறுப்பினர் Tan Kah Hoe தெரிவித்தார்.
கட்டடத்தின் கட்டமைப்புப் பாதுகாப்பை ஆய்வு செய்ய பொதுப்பணித் துறையின் தடயவியல் பிரிவு நேற்று சம்பவ இடத்துக்குச் சென்றது. சரிவுக்கான காரணம் மற்றும் கட்டடத்தின் பாதுகாப்பு நிலை குறித்து தெரிந்து கொள்ள அதன் அறிக்கைக்காகக் காத்திருப்பதாக அவர் கூறினார்.
இதனிடையே, Desa Baiduri சமூக மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மையத்தில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை நான்கில் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடுகளை சமூக நலத்துறை கவனித்து வருவதாகவும், காவல்துறையினர் அப்பகுதியின் பாதுகாப்புக்கு உதவி வருவதாகவும் Kah Hoe தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கட்டடத்துக்கு அருகிலுள்ள சரிவுப் பகுதி இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, Block Dயில் வசித்த சுமார் 80 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். அச்சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
அப்பகுதியில் தொடர்ந்து நீர் கசிவு அல்லது நீரோட்டம் இருப்பது மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குழாய் கசிவு காரணமாக சரிவு ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.



