கோலாலம்பூர், ஜூலை 30 – அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான இணைய வசதிக்கான சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய குறுந்தகவல் சேவைக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். குற்றச்செயல்கள் மற்றும் ஆபத்தான தகவல்கள் விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில் இந்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என அவர் கூறினார். சுபிட்சமான சமூகத்தை உருவாக்குவதற்கு பிரபலமில்லாத பல்வேறு கட்டுப்பாடுகள் அல்லது விதிமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அன்வார் வலியுறுத்தினார்.
இணைய பயனீட்டாளர்கள் நவீனமயமான தொழிற்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதில் சமூக வலைத்தளத்தின் எந்தவொரு தளங்களும் பொது அமைதிக்கு மிரட்டலாக இருப்பதை தடுப்பதை உறுதிப்படுத்தும் கடப்பாட்டையும் ஒழுங்கு முறையையும் கொண்டிருக்க வேண்டும் என தனது முகநூலில் அன்வார் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து அண்மையில் பேரா, தம்புனில் தாமான் கோப்பராசி பெர்பாடுவானில் நடைபெற்ற MADANI விருந்த நிகழ்விலும் தாம் குறிப்பிட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.