Latestமலேசியா

பாலியல் துன்புறுத்தல், பகடி வதையைத் தடுக்கும் விழிப்புணர்வு; ஸ்குடாய் லயன்ஸ் கிளப் – PDRMன் மாணவிகளுக்கான நிகழ்ச்சி

ஸ்கூடாய், ஜூலை-20-ஸ்குடாய் லயன்ஸ் கிளப்பும் அரச மலேசிய காவல் படை PDRMமும் இணைந்து, ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இப்ராஹிம் பெண்கள் இடைநிலைப் பள்ளியில், “She Deserves Safety” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தின.

இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சொந்த பாதுகாப்பு, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பகடி வதையைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைப் பொறுப்பான முடிவுகளை எடுக்க வைக்க வேண்டும் என்பதே இதன் தலையாய நோக்கமாகும்.

பாலியல் துன்புறுத்தலை அடையாளம் காண்பது, பகடி வதையின் தாக்கத்தைப் புரிந்து கொள்வது, சுய எல்லைகளை மதிப்பது, தகாத நடத்தையை எதிர் கொள்ளும் போது தைரியமாகப் பேசி உதவி கேட்பது போன்ற விஷயங்கள் இந்நிகழ்வில் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பள்ளிச் சூழல் அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பான, மரியாதையான மற்றும் ஆதரவானதாக இருக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டது.

PDRMமின் D11 பொது சேவைத் துறை உளவியலாளர் Hafsah பள்ளி மாணவிகளிடம் தனிப்பட்ட பாதுகாப்பு, உளவியல் நல்வாழ்வு, வன்முறையின் எச்சரிக்கை அறிகுறிகளை அறிதல், பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட நடைமுறைகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நிஜ வாழ்க்கைச் சூழ்நிலைகள் தொடர்பான கலந்துரையாடல்களிலும் கேள்விகளிலும் பங்கேற்று மாணவிகள் பல விஷயங்களை அறிந்து கொண்டனர்.

அந்நிகழ்வில் ஒரு பகுதியாக, ஸ்குடாய் லயன்ஸ் கிளப், பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் பாதுகாப்பு விசில்களை விநியோகித்தது.

அவசர அல்லது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் சிக்கிக் கொண்டால், கவனத்தை ஈர்க்கவும் உடனடி உதவியை நாடவும் உதவும் பாதுகாப்புக் கருவியாக இந்த விசில்கள் வழங்கப்பட்டன. விசில்களை முறையாகப் பயன்படுத்துவது குறித்தும் விளக்கப்பட்டது.

இதனிடையே, கல்வி மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஸ்கூடாய் லயன்ஸ் கிளப் உறுதியாக உள்ளதாக அதன் தலைவி திருமதி சுந்தரி தெரிவித்தார்.

அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வெறும் கல்வி சார்ந்த முயற்சி மட்டுமல்ல. மரியாதை, பிறர் உணர்வை மதித்தல் மற்றும் தனிப்பட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றை மதிக்கின்ற ஒரு தலைமுறையை உருவாக்குவதே அக்கிளப்பின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!