சென்னை, ஆகஸ்ட்-6, விஜய் தொலைக்காட்சியின் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
அவரின் இந்த திடீர் அறிவிப்பு பிக் பாக்ஸ் நிகழ்ச்சியின் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா பணிச்சுமையால் கனத்த இதயத்துடன் அம்முடிவை எடுத்திருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் விளக்கினார்.
இதுநாள் வரை அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என அவர் சொன்னார்.
பிக் பாஸ் தொடங்கியதிலிருந்து கடந்த 7 சீசன்களிலும் கமல்ஹாசனே வாரக் கடைசியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பிடிக்காதவர்கள் கூட உலகநாயகனின் வருகைக்காக சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காத்துக் கிடப்பர்.
நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கும் விதமும் போட்டியாளர்களைக் கையாளும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன.
சொல்லப் போனால், மாபெரும் நடிகராகப் பார்த்துப் பிரமித்துப் போன கமலை நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பார்த்து அவருக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியது.
இந்நிலையில் கமல்ஹாசன் இல்லாத பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும், அவரின் இடத்தை யாரால் நிரப்ப முடியுமென பிக் பாஸ் தீவிர ரசிகர்களும் நெட்டிசன்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.