கோலாலம்பூர், ஜூலை 20 – பினாங்கில் உள்ளூர் உணவுகளைத் தயாரிப்பதில் வெளிநாட்டு சமையல்கார்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உரிமை கட்சியின் தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சரான பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இந்த தடை இன வெறிக்கு நிகராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 13 உள்ளூர் உணவுகளை வெளிநாட்டினர் சமைப்பது தடைசெய்வதில் பினாங்கு முன்னணி வகிக்கும் என்ற உண்மையை ஜீரணிப்பது கடினமாக இருப்பதாக தமது முகநுலில் பதிவேற்றம் செய்த அறிக்கையில் டாக்டர் ராமசாமி தெரிவித்தார்.
இந்த தடை 2014 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தபோதிலும் MBPP எனப்படும் பினாங்கு மாகர் மன்றத்திற்கு சொந்தமான அங்காடிக் கடைகளில் மட்டுமே அமலில் இருந்தது.
தற்போது இந்த தடை அனைத்து ஊராட்சி மன்றங்கள் அல்லது பினாங்கு மாநாகர் மன்றத்தின் லைசென்ஸ் பெற்ற அல்லது பினாங்கு மாநகர் மன்ற பகுதிகளில் இந்த தடை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உணவுகளை உள்நாட்டினர் சமைக்காமல் வெளிநாட்டு சமையல்காரர்கள் சமைப்பதில் அந்த உணவுகள் சுவை மோசமடைந்துள்ளதாக வாதிப்பது ஏற்புடையதாக இல்லை.
உணவகங்களில் வெளிநாட்டு சமையல்காரர்கள் வேலை செய்வதால் அவர்கள் உள்ளூர் உணவுகளை சமைக்கின்றனர். வெளியூர் தொழிலாளர்கள் இல்லாவிட்டால் நாட்டில் பல உணவகங்கள் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
உள்நாடு அல்லது வெளிநாட்டினராக இருந்தாலும், உள்ளூர் உணவுகளைத் தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொள்வதற்கான திறன்தான் தேவை.
இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் பிரான்ஸ் நாட்டின் உணவு வகைகளைத் தயாரித்ததற்காக பிரான்ஸ் தேசிய விருதை வென்றதையும் தாம் சுட்டிக்காட்ட விரும்புவதாக ராமசாமி தெரிவித்தார்.
நமக்குப் பிடித்தமான தெரு உணவுகளை எப்படி சமைக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதற்கு வெளிநாட்டுப் பணியாளர்களைப் பெற மலேசியா அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் சுற்றுலாத் துறை மெத்தனமாக இருப்பதும் வியப்பாக இருப்பதாக டாக்டர் ராமசாமி தெரிவித்தார்.