
ஜோர்ஜ்டவுன், மார்ச்-24-பினாங்கில் இந்து கோவில்களின் நிர்வாகம் ஒழுங்காகவும் கட்டுப்பாட்டுடனும் நடைபெற்று வருவதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கூறியுள்ளார்.
கோவில்கள் சார்ந்த அனைத்து விவகாரங்களும் மாநில மட்டத்தில் திட்டமிட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான மஹிமா தொடங்கியுள்ள _’meet and greet_’ நிகழ்ச்சி தொடர்பாக அவர் கருத்துரைத்தார்.
பினாங்கில் உள்ள ஆலயங்கள் உட்பட இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை ஆக்கப்பூர்வமாகத் தீர்க்க, ஆலயங்கள் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைய வேண்டும் என மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார் முன்னதாகக் கூறியிருந்தார்.
அது நல்ல நோக்கம் தான்; ஆனால், தேசிய அளவிலான முயற்சிகள் மாநில அமைப்புகளுடன் ஒத்துபோக வேண்டும் என்றும், ‘double job’ எனப்படும் பணி மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் லிங்கேஷ்வரன் வலியுறுத்தினார்.
பினாங்கில் கோவில் நிர்வாகம், பினாங்கு இந்து சங்கம், பினாங்கு இந்து மாமன்றம் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதாகவும், கோவில்களின் நலன் மற்றும் முன்னேற்றம் முக்கிய இலக்காக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தவிர, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் அறப்பணி வாரியத்தின் முயற்சிகள் பெற்று வருகின்றன.
எனவே, பினாங்கில் அல்லாமல் கெடா, பெர்லிஸ், கிளந்தான் போன்ற மாநிலங்களில் மஹிமா அதிக கவனம் செலுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என லிங்கேஷ்வரன் பரிந்துரைத்தார்.



