
ஜார்ஜ் டவுன், ஜூலை 1 – போலீஸ் அதிகாரியாக தங்களைக் காட்டிக் கொண்ட ‘தொலைபேசி மோசடி’ கும்பல் ஒன்றால் ஏமாற்றப்பட்டு 890,000 ரிங்கிட் தொகையை இழந்த, 59 வயது மதிக்கத்தக்க பள்ளி ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக பினாங்கு துணை காவல்துறைத் தலைவர் டத்தோ முகமது அல்வி ஜைனல் அபிடின் கூறியுள்ளார்.
அந்த பெண் ஆசிரியை, தமது பெயரிலிருக்கும் கிரெடிட் கார்டை தவறாகப் பயன்படுத்தியதாகவும், அவரது வங்கி கணக்கில் இருக்கும் அனைத்து பணத்தையும் காவல் அதிகாரி என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்ட மர்ம நபரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கின்றது.
மேலும் விசாரணை முடிந்ததும் பணம் திருப்பித் தரப்படும் என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் அம்மாதுவிற்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் சந்தேக நபர் மிரட்டியுள்ளான்.
அச்சுறுத்தலுக்கு பயந்து, பாதிக்கப்பட்டவர் மொத்தம் 890,000 ரிங்கிட் தொகையை சந்தேக நபரின் வாங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்துள்ளார் என்று முகமது அல்வி தெரிவித்துள்ளார்.
இக்குற்றம் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடு சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள், தனிப்பட்ட தகவல் அல்லது வங்கி விவரங்களைக் கேட்டறிபவர்களிடம் பொதுமக்கள் கவனமாக வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.