ஜோர்ஜ் டவுன், ஜூலை 5 – பினாங்கில், 21 வயது வங்காளதேச ஆடவர் ஒருவரை கடத்தி, இரண்டு லட்சம் ரிங்கிட் பிணைப் பணம் கேட்டதாக நம்பப்படும், இரு வங்காளதேச ஆடவர்கள் மற்றும் மியன்மார் பெண்ணுக்கு எதிராக இன்று ஜோர்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 22 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட அம்மூவருக்கும், மலாய் மொழி தெரியாது என்பதால், அவர்களிடமிருந்து வாக்குமூலம் எதுவும் இன்று பதிவுச் செய்யப்படவில்லை.
ஜூன் 21-ஆம் தேதி, இரண்டு லட்சம் ரிங்கிட் பிணைப் பணம் கோரி, அவர்கள் முஹமட் காபிர் ஹுசின் எனும் வங்காளதேச ஆடவரை கடத்தியதாக நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
அவர்களுக்கு இன்று ஜாமின் அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. இவ்வழக்கு விசாரணை, வங்காளதேசம் மற்றும் மியன்மார் மொழிப் பெயர்பாளர்களுடன் ஜூலை 16-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.