
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-4- Pulau Tikus மற்றும் ஜோர்ஜ்டவுனில் உள்ள Penang Road பகுதிகளில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஏதோ மாய மந்திரத்தால் ‘வசியப்படுத்தி’ ரொக்கப் பணத்தைத் திருடியதன் பேரில், மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 5 பேர் கைதாகியுள்ளனர்.
திருமணமான ஒரு தம்பதி, 2 ஆடவர்கள், ஒரு பெண் ஆகியோரே அந்த ஐவராவர். பாதிக்கப்பட்டவர்கள் தைவான், நெதர்லாந்து, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் ஆவர்.
பினாங்கு இடைக்கால போலீஸ் தலைவர் Alwi Zainal Abidin அதனை உறுதிப்படுத்தினார். சுற்றுப்யணிகளை நெருங்கி பேச்சுக் கொடுக்கும் சந்தேக நபர்கள், கையிலிருக்கும் ரொக்கத்தைத் காட்டுமாறு அவர்களைக் கேட்கின்றனர்.
அப்படி காட்டியதும், அப்பணத்தை எடுத்துக் கொண்டு அக்கும்பல் ஓட்டம் பிடிக்கிறது. சந்தேக நபர்கள் ஓடிய பிறகே, பணம் பறிபோயிருப்பதை சுற்றுப்பயணிகள் உணர்ந்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து பல்வேறு நாடுகளின் பண நோட்டுகள், 2 வாகனங்கள், ஒரு பேக்கேட் கஞ்சா போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.