
“பினாங்கு இந்துக் கோவில் விவகாரங்களில் தலையிடாதீர்” – வெளியாட்களுக்கு லிங்கேஷ்வரன் எச்சரிக்கை
கோலாலாம்பூர், பிப்ரவரி-24,
பினாங்கிலுள்ள இந்துக் கோவில்கள் தொடர்பான விவகாரங்களில் வெளியார் யாரும் தலையிட வேண்டாம் என, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலத்திலுள்ள கோவில்கள் தொடர்பான முடிவுகள், வழிகாட்டல்கள் எதுவாகினும் அங்குள்ள சமூகத்தினரின் ஒத்துழைப்புடனேயே எடுக்கப்படுகிறது; எடுக்கப்படும்…
கோவில் தொடர்பில் எந்த பிரச்சனையாயினும் அதனைத் தீர்ப்பதற்கு மாநில அரசுக்குத் தெரியும்; ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜு, பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர் உள்ளிட்டோருடன் இணைந்து பிரச்சனைகளுக்கு உரிய வகையில் தீர்வுக் காணப்படும்.
எனவே, வெளியார் இதில் தலையிட வேண்டியதில்லை; மீறி தலையீடு செய்வது சமூகத்தில் குழப்பம், அமைதியின்மை, மற்றும் தேவையற்ற அரசியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என, மேலவையில் பேசியபோது லிங்கேஷ்வரன் வலியுறுத்தினார்.
_“கோவில்கள் என்பது மத நம்பிக்கையின் மையம். அவற்றின் நிலை, சட்டபூர்வம், மற்றும் பாதுகாப்பு குறித்து முடிவெடுப்பது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்”_ என்றார் அவர்.
புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலை பற்றி, சமூக ஆர்வலர் என தம்மைக் கூறிக் கொள்ளும் Tamim Dahri என்பவர் அண்மையில் வீடியோ வெளியிட்டதை லிங்கேஷ்வரன் சுட்டிக் காட்டினார்.
அதே சமயம், டிக் டோக்கில் Cikgu Chandra என்றப் பெயரில் வலம் வரும் ஆடவரும் இந்த கோயில் பற்றி மோசமாகப் பேசியுள்ளார்.
இவர்களுக்கு எல்லாம் தாம் சொல்லி கொள்வது ஒன்றே ஒன்றுதான்…_”தேவையில்லாமல் மூக்கை நுழைத்து இன-மத மோதல்களை எழுப்பாதீர்கள்”_ என லிங்கேஷ் எச்சரிக்கை விடுத்தார்.



