
புக்கிட் மெர்தாஜம் , செப் -29,
அனைத்து ஹோட்டல்களும் தங்கள் விருந்தினர்களுக்காக செக்-இன் நடைமுறையின் ஒரு பகுதியாக பாதுகாப்பு விழிப்புணர்வு வீடியோவை இயக்குவதை கட்டாயமாக்கியிருக்கும் மலேசியாவிலுள்ள முதல் மாநிலமாக பினாங்கு திகழ்கிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்புத் தரங்களை கணிசமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் (Chow Kon Yeow ) இன்று இந்த முயற்சியை தொடக்கிவைத்தார்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையால் தயாரிக்கப்பட்ட ஹோட்டல் விருந்தினர் பாதுகாப்பு விழிப்புணர்வு வீடியோ, தீ பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆகியவற்றில் குறிப்பாக கவனம் செலுத்தி, முக்கிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புரட்சிகரமான திட்டம் குடியிருப்புவாசிகள் மற்றும் ஆண்டுதோறும் மாநிலத்திற்கு வருகை தரும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதில் பினாங்கின் உறுதிப்பாட்டை காட்டியுள்ளது. பினாங்கு மாநிலம் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, கடந்த ஆண்டு சுமார் 8.2 மில்லியன் சுற்றுப்பயணிகளை பினாங்கு வரவேற்றுள்ளது. அதே வேளையில் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு குறிப்பாக நீர் நடவடிக்கைகள்
மற்றும் ஹோட்டல் தங்குமிடங்களில் பாதுகாப்பு குறித்து சுற்றுப்பயணிகளுக்கு புதிய சவால் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆண்டுதோறும் நீரில் மூழ்கும் 320 சம்பவங்களைப் பதிவு செய்கிறது, இதில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொழுதுபோக்கு நீர் நடவடிக்கைகளும் அடங்கும். இதனிடையே விருந்தினர்கள் தங்கள் அறைகளுக்குள் நுழைவதற்கு முன்பு பாதுகாப்பு வீடியோவைப் பார்க்க வேண்டும் என்று கோருவதன் மூலம், ஆபத்துகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பார்வையாளர்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்துவதையும், விபத்துகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைகும் நோக்கத்தையும் கொண்டிருப்பதாக
Chow Kon Yeow சுட்டிக்காட்டினார்.