
கோலாலம்பூர், மே-6, மலேசிய இந்தியர்கள் தங்களுக்கிடையில் பிரிவினை மற்றும் வரட்டு கௌரவத்தை விட்டொழிக்க வேண்டும்.
இச்சமூகம் நீண்ட காலமாகப் பிளவுப்பட்டுள்ளது; இதனால் சமூகத்தின் குரலும் செல்வாக்கும் பனவீனமடைந்துள்ளது.
எனவே, வேற்றுமையை மறந்து ஒருமித்த குரலோடு நாம் இனி பயணிப்போம் என, MAP கட்சித் தலைவரும் ஹிண்ட்ராஃப் போராட்டவாதியுமான பி. வேதமூர்த்தி அனைத்து இந்திய அரசியல் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் தலைவர்களுக்கும் அறைகூவல் விடுத்துள்ளார்.
இதற்காக, ஒரு வட்டமேசை மாநாட்டை முன்மொழிந்த வேதமூர்த்தி, அனைத்து இந்திய அரசியல் கட்சிகளும் அரசு சாரா நிறுவனங்களும் மறுக்க முடியாத உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
இந்தியச் சமூகம் எதிர்நோக்கும் 3 முக்கியப் பிரச்னைகளை விவாதிக்கவும், அவற்றை தீர்ப்பதற்குண்டான பரிந்துரைகளில் இணக்கம் காணவும் இந்த வட்ட மேசை மாநாடு உதவுமென அவர் சொன்னார்.
சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையை நிவர்த்தி செய்வதற்கும் இந்தியச் சமூகத்தை முழுமையாக மேம்படுத்துவதற்கும் 13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 25 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கீடு செய்தல்;
காலனித்துவ மற்றும் சுதந்திரத்திற்கு முந்தைய வேர்களைக் கொண்ட கோயில்கள் மற்றும் இடம்பெயர்வுக்குப் பிறகு கட்டப்பட்ட கோயில்களைப் பாதுகாத்தல் மற்றும் முறைப்படுத்துதல்; இதன் மூலம் நமது கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியம் கண்ணியத்துடன் பாதுகாக்கப்படுவதை உறுதிச் செய்தல்;
‘நாதியில்லா’ இந்தியர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிச் செய்தல்; அதாவது நடப்பில் உள்ள இடைவெளிகளை அகற்றி, சமூகத்திற்குள் உள்ள ஒவ்வொரு குரலும் கேட்கப்படவும் எண்ணப்படவும் வழி வகுத்தல் ஆகியவே அப்பரிந்துரைகளாகும்.
இந்தியச் சமூகம் எதிர்கொள்ளும் நாள்பட்ட பிரச்சினைகள் உண்மையானவை, ஆழமாக வேரூன்றியவை, இவற்றுக்கு அவசர கூட்டு நடவடிக்கை தேவையென்ற மறுக்க முடியாத உண்மையை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட அனைவரின் பங்கேற்போடு இக்கூட்டு நடவடிக்கையை முன்னெடுக்க ஏதுவாக, ஒரு செயலகத்தை அமைக்கவும் வேதமூர்த்தி பரிந்துரைத்துள்ளார்