பட்னா, அக்டோபர்-17, இந்தியா பீஹாரில் மிக அதிக விஷம் கொண்ட கண்ணாடி விரியன் (Russel Viper) பாம்புக் கடிக்கு ஆளான ஆடவர், கடித்த பாம்பை கழுத்தில் தொங்கவிட்டு, அதன் தலையை கையில் பிடித்தவாறு மருத்துவமனைக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவப் பணியாளர்களும் நோயாளிகளும் அதிர்ச்சியில் உறைய, அவசர சிகிச்சைப் பிரிவே அல்லோகலப்பட்டது.
பாம்பு நம்மை கடித்து விடுமோ என்ற பயத்தில் பணியாளர்கள் கூட சற்று தள்ளியே நின்றனர்.
வலி பொறுக்க முடியாமல் அவர் தரையில் உருண்டு புரண்டதும் குறிப்பிடத்தக்கது.
அப்போது கூட பாம்பின் கழுத்தில் அவரின் பிடி தளரவில்லை.
ஒருவழியாக அவரைத் தேற்றி சிகிச்சைக் கட்டிலில் படுக்க வைத்த போதும், அவர் பாம்பை விடுவதாக இல்லை.
பாம்பைக் கையில் வைத்திருக்கும் வரை சிகிச்சையளிப்பது கடினம் என மருத்துவர்கள் கண்டித்த பிறகே கையிலிருந்து அதை அவர் கீழே போட்டார்.
தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வரும் அவ்வாடவரின் தற்போதைய நிலை குறித்து தெரியவில்லை.