
கோலாலம்பூர், ஏப்ரல்-25-தலைநகரில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றும் தீவிர நடவடிக்கையாக, ஏப்ரல் 23 வியாழக்கிழமை, புக்கிட் கெரிஞ்சி (Bukit Kerinchi) பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த 26 தற்காலிகக் கடைகளை DBKL அமுலாக்கத்துறையினர் அதிரடியாக அகற்றினர்.
கடந்த வாரம் வழங்கப்பட்ட இறுதி எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இப்பகுதிகளில் உள்ள கடைகள் முறையான உரிமம் இன்றி செயல்பட்டதோடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சுகாதாரச் சீர்கேடுகளையும் ஏற்படுத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆரம்பத்தில் வியாபாரிகள் கால அவகாசம் கோரி முறையிட்டாலும், இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்தே பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டு விட்டதை DBKL சுட்டிக்காட்டியது.
அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் கடைகள் உருவாவதைத் தடுக்க அந்தப் பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், பொது இடங்களை ஒழுங்குபடுத்தும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்றும் DBKL கூறியது.
எதிர்கால நடவடிக்கைகளைத் தவிர்க்க, வியாபாரிகள் முறையான வழிகளில் உரிமம் பெற்றுத் தொழில் செய்யுமாறு அது அறிவுறுத்தியது.



