
புத்ராஜெயா, ஏப்ரல்-25-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதியத் தலைமை ஆணையராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய பரிந்துரையை ஏற்று, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அப்துல் ஹலிம் வரும் மே மாதம் 13-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்பார் என ஷம்சுல் சொன்னார்.
நடப்புத் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி, மே 12-ஆம் தேதியுடன் தனது பணிக்காலத்தை நிறைவுச் செய்கிறார்.
2020-ஆம் ஆண்டு முதல் அப்பதவிலிருக்கும் அசாம் பாக்கிக்கு, இதுவரை 3 முறை ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிறுவனத்தில் பங்குரிமை, ‘corporate mafia’ உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி, பதவி நீக்கக் கோரிக்கைக்கு ஆளாகியிருந்த நிலையில், அசாம் பாக்கியின் சேவை முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில்,நீதித்துறையிலிருந்து நாட்டின் மிக உயரிய ஊழல் தடுப்புப் பிரிவை வழிநடத்த வரும் அப்துல் ஹலிமின் புதிய பயணம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது..



