தோக்கியோ, மே 14 – ஜப்பானில், மலையேறிகளிடையே அதிகம் பிரபலமான புஜி மலையில் ஏற இனி ஆன்லைனில் முன்பதிவுச் செய்யும் முறையை அந்நாட்டு அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பிரசித்தி பெற்ற அந்த எரிமலை சுற்றுலாத் தளத்தில், அதிகரித்து வரும் சுற்றுலா நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஏதுவாக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானின் மிக உயரமான மலையாக புஜி மலை திகழ்கிறது.
கோடைகாலத்தில், நடைப்பயணத்தில் பங்கேற்க அங்கு சுற்றுப் பயணிகள் படையெடுப்பது வழக்கமாகும்.
அதனால், சுற்றுசூழல் பாதிப்படையாமல் இருக்கவும், சுற்றுப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் ஜப்பானிய அரசாங்கம் அந்த ஆன்லைன் பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன் வாயிலாக, நடைப்பயணத்திற்கு மிகவும் பிரபலமான யோஷிடா பாதையில் நெரிசலை குறைக்க, அங்கு நாள் ஒன்றுக்கு நான்காயிரம் சுற்றுப் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கவும், அவர்களுக்கு தலா 13 அமெரிக்க டாலர்களை கட்டணமாக விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாண்டு, வரும் ஜலை தொடங்கி செம்டம்பர் மாதம் வரையிலான மலையேறும் பருவத்திற்கான ஆன்லைன் பதிவு, இம்மாதம் 20-ஆம் தேதி திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள வேளை ; ஆன்லைன் வாயிலாக பதிவுச் செய்ய முடியாதவர்கள், நாள்தோறும் ஆயிரம் இடங்களுக்கான டிக்கெட்டுகளை நேரடியாக வாங்கிக் கொள்ளவும் தளர்வு வழங்கப்படவுள்ளது.