புது டெல்லி, ஜூன்-7 – புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல போலீவூட் நடிகையுமான கங்கனா ரனாவத்தை, விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் அதிகாரி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புது டெல்லி செல்வதற்காக கங்னா பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் விமான நிலையம் வந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
பஞ்சாப் விவசாயிகளுக்கு எதிரான கங்கனாவின் கருத்துகளால் அதிருப்தி அடைந்ததால் அப்பெண் காவலர், கங்கனாவை அறைந்திருக்கிறார்.
எனினும் பாதுகாவலர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்தி கங்கனாவைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
கன்னத்தில் அறைந்த அப்பெண் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தாக்குதல் குறித்து பின்னர் வீடியோ வெளியிட்ட கங்கனா, தாம் நலமுடன் இருப்பதாகக் கூறினார்.
தன்னைத் தாக்கியப் பெண் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவரான கங்கனா, பஞ்சாப் விவசாயிகளை பிரிவினைவாதிகள் எனக் கூறியதற்காக, ஏற்கனவே அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2021ல் இதே சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்த போதும், கங்கனாவின் காரை சூழ்ந்துகொண்டு விவசாயிகள் கண்டனத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
BJP மற்றும் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான கங்கனா, நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று MP ஆகியிருக்கிறார்.