
புது டெல்லி, அக்டோபர்- 8,
நேற்று வட இந்திய மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட மலை சரிவில் பேருந்து ஒன்று புதைந்ததில், குறைந்தது 18 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
அந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் இருந்தனர் என்றும் அதில் 18 பேர் நிலச்சரிவிற்கு பலியானர் என்றும் மாநிலத்தின் துணை முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், பேருந்து முற்றிலும் சிதைந்த நிலையில் இருப்பதைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரங்கள், மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதையும் காண முடிந்தது.
இந்நிலையில் இரு குழந்தைகள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பருவ கால மழையால் ஹிமாச்சல் பிரதேசம் முழுவதும் திடீர் வெள்ளம், மண் சரிவு மற்றும் பாதை சேதம் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து உயிரிழப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
மேலும், மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண் சரிவில் 28 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.