
ஷா அலாம், ஏப் 7 – அண்மையில் புத்ரா ஹைட்சில் எரிவாயு குழாயில் நிகழ்ந்த தீ விபத்து பேரிடரில் அருகேயுள்ள பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளில் 613 பேரின் வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு முழு வாடகை செலவுகளுக்கான 7.2 மில்லியன் ரிங்கிட்டை சிலாங்கூர் அரசு ஏற்றுக்கொள்ளும் என மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் மாதந்திர வாடகை கட்டணமாக 2,000 ரிங்கிட்டை சுமார் ஆறு மாதத்திற்கு செலுத்தப்படும். 613 குடும்பத்தினர் ஆறு மாதம் காலம் வாடகை வீட்டில் தங்கியிருப்பதற்கான வாடகை கட்டணத்தை ஏற்றுக்கொள்வது என மாநில அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகவும் ஒவ்வொரு வீட்டிற்கும் 2,000 ரிங்கிட் வாடகை கட்டணம் வழங்கப்படும் என இன்று மாநில அரசாங்க செயலாளரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமிருடின் ஷாரி கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மறுசீரமைக்கப்படும்வரை அதற்கான மொத்த செலவுத் தொகையான 7.2 மில்லியன் ரிங்கிட்டை மாநில அரசாங்கம் செலுத்தும். இதனிடையே குடியிருப்புகள் மற்றும் இதர கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம், பழுது மற்றும் மின் வயரிங் செலவு உட்பட 5.4 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மதிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாணவர்களிடையே ஏற்படும் அதிர்ச்சியின் விளைவுகள் குறித்தும் மாநில அரசு கவனம் செலுத்தியது.
தற்காலிக நிவாரண மையங்களில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களில் 20 விழுக்காட்டினர் அதிர்ச்சி காரணமாக பள்ளிக்கு வரவில்லை என்றும், அவர்களுக்கு மாநில கல்வித் துறை சிறப்பு உதவிகளை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த சம்பவத்தில் நேரடியாக பாதிப்புக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்ட 265 மாணவர்களுக்கு ஈப்போ மாநகர் மன்றம் நன்கொடையாக 500 ரிங்கிட் வழங்கும்.
வாடகை வீடுகள் மற்றும் நிதி உதவிக்கான சலுகைகள் படிப்படியாக வழங்கப்படும், மேலும் அனைத்து தகவல்களும் ஒரு சிறப்பு தளத்தின் மூலம் வெளிப்படையாக அணுகப்படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம், அது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமிருதீன் கூறினார்.