கோலாலம்பூர், ஜூன் 6 – சிலாங்கூர், பூச்சோங் சுற்று வட்டாரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், போலி அல்லது பிறருக்கு சொந்தமான MyKad அடையாள அட்டையை வைத்திருந்த ஏழு பாதுகாவலர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
கடந்த இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் அடிப்படையில், அந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, தேசிய பதிவுத் துறையின் புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
அச்சோதனையின் வாயிலாக, பெண் ஒருவர் உட்பட ஏழு பாதுகாவலர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் 36 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள் ஆவர்.
போலியான அல்லது பிறருக்கு சொந்தமான “மைகார்ட்” அடையாள அட்டையை பயன்படுத்தி, தங்களின் உண்மையான விவரங்களை மறைத்து கொண்டு, அவர்கள் பாதுகாவலர்களாக பணிப்புரிந்து வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
தேசிய பதிவுச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படும் வேளை ; குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது 20 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.